இதற்கு முன்னர் (தவ்ராத்தையும் இன்ஜீலையும் இஸ்ராயீலுடைய) மக்களுக்கு நேர்வழி காட்டியாக (இறக்கினான்). இன்னும், (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதத்தை (உம்மீது) இறக்கினான். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களுக்கு கடினமான தண்டனையுண்டு. அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன் ஆவான்.
(நபியே!) அவன் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கினான். அதில் பொருள் தெளிவான (முஹ்கம்) வசனங்கள் உள்ளன. அவைதான் வேதத்தின் அடிப்படையாகும். இன்னும், பொருள் தெரிய முடியாத வேறு (முதஷாபிஹ்) வசனங்களும் உள்ளன. ஆக, தங்கள் உள்ளங்களில் கோணல், (சந்தேகம்) உள்ளவர்கள் குழப்பத்தை தேடியும் (மறைக்கப்பட்ட) அதன் விளக்கத்தை தேடியும் அதில் பொருள் தெரியமுடியாதவற்றைப் பின்பற்றுகிறார்கள். அதன் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர (யாரும்) அறியமாட்டார். கல்வியில் தேர்ச்சியடைந்தவர்களோ, “அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (முஹ்கம், முதஷாபிஹ்) எல்லாம் எங்கள் இறைவனிடமிருந்துதான் (இறக்கப்பட்டவை)’’ என்று கூறுவார்கள். நிறைவான அறிவுடையவர்களைத் தவிர (யாரும்) நல்லுபதேசம் பெறமாட்டார்.
“எங்கள் இறைவா! நீ எங்களை நேர்வழி செலுத்திய பின்னர் எங்கள் உள்ளங்களை கோணலாக்கிவிடாதே! இன்னும், உன்னிடமிருந்து (உனது) கருணையை எங்களுக்கு வழங்கு! நிச்சயமாக நீதான் மகா கொடைவள்ளல் ஆவாய்!
நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்விடம் (உள்ள தண்டனையிலிருந்து) எதையும் அவர்களை விட்டு அறவே தடுக்காது. இன்னும், அவர்கள்தான் நரகத்தின் எரிபொருள்கள் ஆவார்கள்.
(இவர்களின் தன்மை) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார் இன்னும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் தன்மையைப் போன்றுதான். அவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்.
(நபியே!) நிராகரிப்பாளர்களுக்கு கூறுவீராக: “(நீங்கள்) வெற்றி கொள்ளப்படுவீர்கள். இன்னும், (நீங்கள் இறந்த பின்னர் மறுமையில்) ஜஹன்னம் (-நரகத்தின்) பக்கம் ஒன்று திரட்டப்படுவீர்கள். அது தங்குமிடத்தால் மிகக் கெட்டது.’’
(பத்ர் போரில்) சந்தித்த இரு கூட்டங்களில் திட்டமாக உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருந்தது. ஒரு கூட்டம் (நம்பிக்கைக் கொண்டு) அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறது, மற்றொரு கூட்டம் (அல்லாஹ்வை) நிராகரிக்கக்கூடியது. (அதிக எண்ணிக்கையில் இருந்த) இவர்களை அ(ல்லாஹ்வின் பாதையில் போர் புரிப)வர்கள் தங்களைப் போன்று இரு மடங்குகளாக (மட்டும்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தனது உதவியால் பலப்படுத்துகிறான். (படிப்பினை பெறும்) பார்வையுடையோருக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை திட்டமாக இருக்கிறது.
பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளியின் குவிக்கப்பட்ட (பெரும்) குவியல்கள், அடையாளமிடப்பட்ட (உயர் ரக அழகிய) குதிரைகள், கால்நடைகள், விளைநிலம் ஆகிய ஆசைகளின் விருப்பம் மக்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை (அனைத்தும் அற்ப) உலக வாழ்க்கையின் (சொற்ப) இன்பமாகும்! அல்லாஹ் - அவனிடம்தான் (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு.
(நபியே!) கூறுவீராக: “இவற்றைவிட சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கு தங்கள் இறைவனிடம் சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இன்னும் பரிசுத்தமான மனைவிகளும் அல்லாஹ்வின் பொருத்தமும் (அவர்களுக்கு) உண்டு. இன்னும் அல்லாஹ் (தனது) அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.’’
அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும் (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக!’’
நீதத்தை நிலைநிறுத்துபவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: “நிச்சயமாக அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை’’ என்று. இன்னும், வானவர்களும் கல்விமான்களும் இதற்கு சாட்சி கூறுகிறார்கள். மிகைத்தவனும் மகா ஞானவானுமாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை.
நிச்சயமாக அல்லாஹ்விடம் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமையினால் (‘இதுதான் உண்மையான வேதம்’ என்ற) அறிவு அவர்களுக்கு வந்த பின்னரே தவிர (இதில்) மாறுபடவில்லை. ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவரை) விசாரிப்பதில் மிக விரைவானவன்.
ஆக, (நபியே! இதற்குப் பின்னும்) அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி), நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் எனது முகத்தை அல்லாஹ்விற்கு பணிய வைத்தேன். இன்னும், என்னை பின்பற்றியவர்களும் (தங்கள் முகங்களை அல்லாஹ்விற்கு பணிய வைத்தார்கள். நாங்கள் அனைவரும் முழுமையாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டோம்).’’ இன்னும், “வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், (சிலை வணங்கும்) பாமரர்களுக்கும் கூறுவீராக: “நீங்களும் (அவ்வாறே உங்கள் முகங்களை) பணியவைக்கிறீர்களா? (-உண்மையான இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்குவீர்களா?)” ஆக, அவர்களும் (தங்கள் முகங்களை அல்லாஹ்விற்கு மட்டும்) பணியவைத்தால் திட்டமாக அவர்கள் நேர்வழி அடைவார்கள். இன்னும், அவர்கள் (இந்த அழைப்பை) புறக்கணித்தால், உம்மீது கடமை எல்லாம் (சத்தியத்தை) எடுத்துச் சொல்வதுதான். அல்லாஹ் (தனது) அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.
இன்னும், அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுடைய (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்து விட்டன. இன்னும் (மறுமையில்) உதவியாளர்களில் எவரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்.
(நபியே!) நீர் வேதத்தில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டவர்களை கவனிக்கவில்லையா? அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் - அது அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பதற்காக - அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பிறகு, அவர்களில் ஒரு பிரிவினர் (புறக்கணித்து) விலகி செல்கிறார்கள். அவர்கள் (எப்போதும் சத்தியத்தை) புறக்கணிப்பவர்களே.
அதற்கு காரணம், “எண்ணப்படும் (குறிப்பிட்ட) சில நாட்களைத் தவிர (நரக) நெருப்பு எங்களை அறவே தீண்டாது’’ என்று நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். இன்னும், அவர்கள் தங்களது மார்க்கத்தில் பொய்களை இட்டுக்கட்டி கூறி வந்தது அவர்களை ஏமாற்றிவிட்டது.
ஆக, (நபியே!) அறவே அதில் சந்தேகமில்லாத ஒரு நாளில் நாம் அவர்களை (உயிர்ப்பித்து) ஒன்று சேர்த்தால்; இன்னும், ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்கு முழுமையாகக் கூலி கொடுக்கப்பட்டால் (அப்போது அவர்களின் நிலைமை) எப்படி (பரிதாபமாக) இருக்கும்? (அந்நாளில்) அவர்கள் (சிறிதும்) அநீதி இழைக்கப்படமாட்டார்கள்.
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் உரிமையாளனே! நாடியவருக்கு நீ ஆட்சியைக் கொடுக்கிறாய்; நாடியவரிடமிருந்து நீ ஆட்சியை பறிக்கிறாய்; நாடியவர்களை நீ கண்ணியப்படுத்துகிறாய்; நாடியவர்களை நீ இழிவுபடுத்துகிறாய்; நன்மை எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது; நிச்சயமாக நீ ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன்.
நீ இரவைப் பகலில் நுழைக்கிறாய்; பகலை இரவில் நுழைக்கிறாய்; இறந்ததிலிருந்து உயிருள்ளதை நீ வெளியாக்குகிறாய்; உயிருள்ளதிலிருந்து இறந்ததை நீ வெளியாக்குகிறாய்; நீ நாடியவருக்கு கணக்கின்றி வழங்குகிறாய்.’’
நம்பிக்கையாளர்கள், நம்பிக்கையாளர்களைத் தவிர நிராகரிப்பாளர்களை (தங்களது) பாதுகாவலர்களாக (உதவியாளர்களாக) எடுத்துக்கொள்ள வேண்டாம். எவர் இதைச் செய்வாரோ அவர் அல்லாஹ்வை விட்டும் நீங்கிவிட்டார். (அல்லாஹ்வும் அவரை விட்டு நீங்கிவிட்டான். இன்னும் அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு நீங்கியவர் ஆவார்.) நீங்கள் (அவர்களின் ஆதிக்கத்தில் இருந்து, அவர்கள் பெரும்பான்மையாக இருந்து) அவர்களை அதிகம் அஞ்சினால் தவிர. (அப்போது மார்க்க விஷயத்தில் அவர்களுக்கு கீழ்ப்படியாமல், உலக விஷயத்தில் அவர்களுடன் மென்மையாக நடப்பது உங்கள் மீது குற்றமில்லை). இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுமிடம் இருக்கிறது.
(நபியே!) கூறுவீராக: உங்கள் நெஞ்சங்களிலுள்ளதை நீங்கள் மறைத்தாலும்; அல்லது, அதை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அதை நன்கறிவான். இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் (அவன்) நன்கறிவான். இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
ஒவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்ததையும், தீமையில் தான் செய்ததையும் (தனக்கு முன்) சமர்ப்பிக்கப்பட்டதாக காணும் நாளில், தனக்கு மத்தியிலும், அதற்கு (-தீமைக்கு) மத்தியிலும் நீண்டதூரம் இருக்க வேண்டுமே! என (தீமை செய்த ஆத்மா) விரும்பும். அல்லாஹ், தன்னைப்பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ் அடியார்கள் மீது மிக இரக்கமுள்ளவன் ஆவான்.
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.’’
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்விற்கும் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். ஆக, நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்கள் மீது அன்பு வைக்கமாட்டான்.’’
ஒரு (சிறந்த) சந்ததியை (அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்). அதில் சிலர், சிலரைச் சேர்ந்தவர். (அவர்கள் அனைவரின் கொள்கையும் ஒன்றே.) அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
(நபியே!) இம்ரானுடைய மனைவி, “என் இறைவா! நிச்சயமாக நான் என் வயிற்றிலுள்ள(குழந்)தை(யை இறையாலயத்தில் உன்னை வணங்க) அர்ப்பணிக்கப்பட்டதாக உனக்கு நேர்ச்சை செய்தேன். ஆகவே, (அதை) என்னிடமிருந்து ஏற்றுக்கொள்! நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்’’ எனக் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
ஆக, (இம்ரானுடைய மனைவி) அவளைப் பெற்றெடுத்தபோது, “என் இறைவா! நிச்சயமாக நான் அவளைப் பெண்ணாக பெற்றெடுத்தேன். - அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் மிக அறிந்தவன். (இந்த) பெண்ணைப் போன்று (அந்த) ஆண் இல்லை. - நிச்சயமாக நான் அவளுக்கு ‘மர்யம்’ எனப் பெயரிட்டேன். அவளையும், அவளுடைய சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து நீ பாதுகாக்க வேண்டுமென நிச்சயமாக நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன்!’’ எனக் கூறினாள்.
ஆகவே, அவளுடைய இறைவன் அவளை (அன்போடு) அழகாக அங்கீகரித்தான். இன்னும், அழகியமுறையில் அவளை வளரச் செய்தான். இன்னும், ஸகரிய்யாவை அவளுக்கு பொறுப்பாளராக்கினான். (அவள் தங்கி இருந்த) மாடத்தில் ஸகரிய்யா அவளிடம் நுழையும்போதெல்லாம், ஓர் உணவை அவளிடம் கண்டார். “மர்யமே! எங்கிருந்து உனக்கு இது (வருகிறது)?’’ எனக் கூறினார். “இது அல்லாஹ்விடமிருந்து (வருகிறது). நிச்சயமாக அல்லாஹ் - தான் நாடுகிறவருக்கு - கணக்கின்றி வழங்குவான்’’ என அவள் கூறினாள்.
அவ்விடத்தில் ஸகரிய்யா தன் இறைவனை பிரார்த்தித்தார். “என் இறைவா! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல (தூய்மையான) சந்ததியை தா! நிச்சயமாக நீ பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன்’’ எனக் கூறினார்.
ஆக, அவர் மாடத்தில் நின்று தொழுது கொண்டிருக்க அவரை வானவர்கள் அழைத்தார்கள்: “அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை உண்மைப்படுத்தக் கூடியவராக, தலைவராக, சரீர இன்பத்தைத் துறந்தவராக, நபியாக, நல்லோரில் ஒருவராக இருக்கின்ற யஹ்யா (என்ற ஒரு மக)வைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான்’’ (என்று வானவர்கள் கூறினார்கள்).
“என் இறைவா! நானோ முதுமை அடைந்திருக்க, என் மனைவியோ மலடியாக இருக்க, எனக்கு எவ்வாறு குழந்தை கிடைக்கும்” என்று (ஸகரிய்யா) கூறினார். “(அல்லாஹ்வின் கட்டளை) இவ்வாறுதான். அல்லாஹ், தான் நாடியதை செய்வான்” என்று அல்லாஹ் (பதில்) கூறினான்.
“என் இறைவா! எனக்கோர் அத்தாட்சியை ஏற்படுத்து!’’ என்று (ஸகரிய்யா) கூறினார். “உமக்கு அத்தாட்சியாவது, சாடையாக தவிர மூன்று நாட்கள் மக்களுடன் நீர் பேசமுடியாமல் இருப்பதாகும். இன்னும், உமது இறைவனை அதிகம் நினைவு கூர்வீராக! மாலையிலும் காலையிலும் (ஸுப்ஹானல்லாஹ் என்று கூறி) அவனைத் துதிப்பீராக!’’ என்று அல்லாஹ் (பதில்) கூறினான்.
“மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்தான்; உம்மைப் பரிசுத்தப்படுத்தினான்; அகிலத்தார்களின் பெண்களைவிட உம்மைத் தேர்ந்தெடுத்தான்” என்று வானவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
(நபியே!) இவை மறைவான செய்திகளிலிருந்து உள்ளவை. இவற்றை உமக்கு வஹ்யி (மூலம்) அறிவிக்கிறோம். அவர்களில் யார் மர்யமை பொறுப்பே(ற்று வள)ர்ப்பார் என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்(து சோதித்)தபோது நீர் அவர்களிடம் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்தபோதும் நீர் அவர்களிடம் இருக்கவில்லை.
“மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையினால் உமக்கு (ஒரு குழந்தையை கொடுக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம் ஆகும். (அவர்) இந்த உலகத்திலும் மறுமையிலும் கம்பீரமானவராகவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமானவர்களிலும் இருப்பார்’’ என்று வானவர்கள் கூறிய சமயத்தை (நபியே) நினைவு கூர்வீராக!
“என் இறைவா! ஆடவர் ஒருவரும் என்னைத் தொடாமல் இருக்க, எனக்கு எப்படி குழந்தை ஏற்படும்?’’ என்று (மர்யம்) கூறினார். “(அல்லாஹ்வின் நாட்டம்) இவ்வாறுதான், அல்லாஹ், தான் நாடியதை (நாடியபடி) படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அதற்கு அவன் கூறுவதெல்லாம் ‘ஆகுக’ என்றுதான். உடனே (அது) ஆகிவிடும்” என்று அல்லாஹ் கூறினான்.
இன்னும், இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் (ஆக்குவான்). (ஈஸா தூதரான பிறகு,) “நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறேன். நிச்சயமாக நான் உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையின் உருவ அமைப்பைப்போல் படைத்து, அதில் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியினால் அது பறவையாக ஆகிவிடும். இன்னும், பிறவிக் குருடரையும் வெண் குஷ்டரையும் குணப்படுத்துவேன். இன்னும், மரணித்தோரையும் அல்லாஹ்வின் அனுமதியினால் உயிர்ப்பிப்பேன். இன்னும், நீங்கள் (அடுத்த வேளை) என்ன (உணவை) புசிப்பீர்கள் என்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் என்ன சேமித்து வைக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு அறிவிப்பேன். நிச்சயமாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி திட்டமாக இருக்கிறது” (என்று அவர் கூறினார்).
(ஈஸா தொடர்ந்து கூறியதாவது:) “இன்னும், எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை (நான்) உண்மைப்படுத்துபவராக (இருப்பேன்). இன்னும், உங்கள் மீது தடுக்கப்பட்டதில் சிலவற்றை உங்களுக்கு நான் ஆகுமாக்குவதற்காகவும் (அனுப்பப்பட்டுள்ளேன்). இன்னும், உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் உங்களிடம் வந்திருக்கிறேன். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்.”
ஆக, அவர்களில் (பலர் தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த போது, “அல்லாஹ்விற்காக எனது உதவியாளர்கள் யார்?’’ எனக் கூறினார். (அவருடைய உண்மையான) தோழர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் (தூதராகிய உமக்கு) உதவியாளர்களாக இருப்போம். நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம். இன்னும், நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என (நீர்) சாட்சி அளிப்பீராக’’ என்று கூறினார்கள்.
“எங்கள் இறைவா! நீ இறக்கியதை நம்பிக்கை கொண்டோம். இன்னும், இந்தத் தூதரை பின்பற்றினோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் எங்களை(யும் சாட்சியாளர்களாக) பதிவு செய்!’’ (என்று அவர்கள் பிரார்த்தித்தனர்).
“ஈஸாவே நிச்சயமாக நான் உம்மை (பூமியிலிருந்து) கைப்பற்றுவேன்; உம்மை என் பக்கம் உயர்த்துவேன்; நிராகரிப்பாளர்களிலிருந்து உம்மைப் பரிசுத்தப்படுத்துவேன்; உம்மை (நபியாக ஏற்று) பின்பற்றியவர்களை இறுதிநாள் வரை (உமது நபித்துவத்தை) நிராகரித்தவர்களுக்கு மேலாக ஆக்குவேன்” என அல்லாஹ் கூறிய சமயத்தை (நபியே) நினைவு கூர்வீராக! (நிராகரிப்பாளர்களே!) பிறகு என் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, (ஈஸாவின் விஷயத்தில்) நீங்கள் கருத்து வேறுபாடு செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு மத்தியில் நான் தீர்ப்பளிப்பேன்.
ஆக, எவர்கள் (உமது நபித்துவத்தை) நிராகரித்தார்களோ (இன்னும், உமக்கு தகுதி இல்லாததை உம்முடன் இணைத்து பேசினார்களோ) அவர்களை இம்மையிலும் மறுமையிலும் கடினமான தண்டனையால் நான் தண்டிப்பேன். அவர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இருக்க மாட்டார்.
ஆக எவர்கள் (உம்மை எப்படி நம்பிக்கை கொள்ள வேண்டுமோ அப்படி) நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்களின் (நற்)கூலிகளை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்கள் மீது அன்பு வைக்கமாட்டான்.
(நபியே!) நாம் உமக்கு ஓதிக் காண்பித்த (ஈஸாவைப் பற்றிய உண்மையான சரித்திரங்களாகிய) அவை (அனைத்தும் உமது நபித்துவத்தின்) அத்தாட்சிகளிலிருந்தும் ஞானமிகுந்த (குர்ஆன் என்னும்) அறிவுரையிலிருந்தும் உள்ளவை ஆகும்.
நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவின் உவமை ஆதமுடைய உவமையைப் போன்றாகும். அவரை மண்ணிலிருந்து படைத்தான். பிறகு, ‘ஆகு’ என்று அவரை நோக்கி கூறினான். (உடனே அவர் மனிதனாக) ஆகிவிட்டார்.
ஆக, (நபியே! இதைப்பற்றிய) கல்வி உமக்கு வந்த பின்னர் இதில் யாராவது உம்மிடம் தர்க்கித்தால், (அவர்களை நோக்கி) கூறுவீராக: “வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைப்போம். பிறகு, (அனைவரும் ஒன்றுகூடி) மிகுந்த பயத்தோடும் பணிவோடும் மன்றாடி பிரார்த்திப்போம். இன்னும், பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை ஆக்குவோம்.’’
நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறாகும். (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் இல்லை, அல்லாஹ்வைத் தவிர. இன்னும் நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
(நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! எங்கள் மத்தியிலும் உங்கள் மத்தியிலும் (நீதமான) சமமான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்! அதாவது: அல்லாஹ்வைத் தவிர (எவரையும் நீங்களும் நாமும்) வணங்கமாட்டோம்; அவனுக்கு எதையும் (நீங்களும் நாமும்) இணையாக்க மாட்டோம்; அல்லாஹ்வைத் தவிர நம்மில் சிலர் சிலரை வணங்கப்படும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது.’’ (இதுதான் அந்த நீதமான சமமான விஷயம்.) ஆக, அவர்கள் (இதை ஏற்காமல் புறக்கணித்து) விலகி சென்றால், “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சி சொல்லுங்கள்!’’ என்று நீங்கள் (அவர்களிடம்) கூறிவிடுங்கள்.
வேதக்காரர்களே! இப்ராஹீம் விஷயத்தில் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள். தவ்ராத்தும், இன்ஜீலும் அவருக்கு பின்னரே தவிர இறக்கப்படவில்லை. ஆக, (உண்மை இவ்வளவு தெளிவாக இருந்தும்) நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
(முன்பு) நீங்களோ உங்களுக்கு எதில் (கொஞ்சம்) அறிவிருந்ததோ அதில் தர்க்கம் செய்தீர்கள். ஆக, உங்களுக்கு எதில் அறவே அறிவில்லையோ அதில் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள். அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
இப்ராஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிறித்தவராகவும் இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் கட்டளையை உறுதியாக பின்பற்றுபவராக (-ஏகத்துவத்தில் மிக உறுதியுடையவராக), முஸ்லிமாக (-அல்லாஹ்விற்கு முற்றிலும் பணிந்தவராக) இருந்தார். இன்னும், இணைவைப்பவர்களில் அவர் இருக்கவில்லை.
நிச்சயமாக இப்ராஹீமுக்கு மக்களில் மிக நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இந்த நபியை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் (இன்னும், உதவியாளன்) ஆவான்.
(நம்பிக்கையாளர்களே!) வேதக்காரர்களில் ஒரு கூட்டம் உங்களை வழிகெடுக்க வேண்டும் என்று விரும்புகிறது. அவர்கள் தங்களைத் தாமே தவிர (உங்களை) வழிகெடுக்க முடியாது. இன்னும், (இதை) அவர்கள் உணரமாட்டார்கள்.
இன்னும், வேதக்காரர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்களில் சிலரை நோக்கிக்) கூறினர்: “நீங்கள் நம்பிக்கையாளர்களுக்கு இறக்கப்பட்டதை பகலின் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள்; அவர்கள் (தங்கள் நம்பிக்கையிலிருந்து) திரும்புவதற்காக அதன் இறுதியில் (அதை) நிராகரித்து விடுங்கள்.”
இன்னும், (அவர்கள் கூறினார்கள்:) “உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவரைத் தவிர (முஸ்லிம்களை) நம்பாதீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்டது போன்று (ஒரு வேதம் வேறு) ஒருவருக்கு கொடுக்கப்படும் என்றோ அல்லது (முஸ்லிம்கள் மறுமையில்) உங்கள் இறைவனுக்கு முன்னர் உங்களோடு தர்க்கிப்பார்கள் என்றோ நம்பாதீர்கள்.’’ (இவ்வாறு அவர்கள் கூறினார்கள்). (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக நேர்வழி என்பது அல்லாஹ்வின் நேர்வழிதான்.” (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக அருள் அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. (அவன்) நாடியவருக்கு அதைக் கொடுக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.’’
வேதக்காரர்களில் சிலர் இருக்கிறார்கள். (நீர்) ஒரு பொற்குவியலை அவர்களிடம் நம்பி கொடுத்தாலும் (குறைவின்றி) உமக்கு அதை அவர்கள் (திரும்ப) ஒப்படைத்துவிடுவார்கள். இன்னும், அவர்களில் சிலர் இருக்கிறார்கள். ஒரு தீனார் நாணயத்தை நீர் அவர்களிடம் நம்பி ஒப்படைத்தாலும் அதை உமக்கு அவர்கள் (திரும்ப) ஒப்படைக்க மாட்டார்கள், அவர்களிடம் (நீர்) தொடர்ந்து நின்று கொண்டிருந்தால் தவிர. அதற்கு காரணமாவது, “(யூதரல்லாத மற்ற) பாமரர்கள் விஷயத்தில் (நாம் என்ன அநியாயம் செய்தாலும் அது) நம்மீது குற்றமில்லை’’ என்று நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்கள்.
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய உடன்படிக்கைக்கு பதிலாகவும் தங்கள் சத்தியங்களுக்கு பதிலாக சொற்ப கிரயத்தை வாங்குகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் அறவே (நற்)பாக்கியமில்லை. இன்னும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும், அவர்கள் பக்கம் பார்க்க மாட்டான்; இன்னும், அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான். இன்னும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
இன்னும் நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் வேதத்(தை ஓதுவ)தில் தங்கள் நாவைக் கோணுகிறார்கள், வேதத்திலுள்ளதுதான் என (நீங்கள்) அதை எண்ணுவதற்காக. ஆனால், அது வேதத்தில் உள்ளதல்ல. இன்னும், “அது அல்லாஹ்விடமிருந்து வந்தது’’ எனக் கூறுகிறார்கள். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் அறிந்தே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்கள்.
வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் ஒரு மனிதருக்கு கொடுக்க, பிறகு அவர் மக்களை நோக்கி, “அல்லாஹ்வைத் தவிர்த்து என்னை வணங்குபவர்களாக நீங்கள் ஆகிவிடுங்கள்’’ என்று கூறுவதற்கு அவருக்கு அறவே உரிமையில்லை. என்றாலும், (மக்களை நோக்கி கூறியதாவது), “வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்பிப்பவர்களாக நீங்கள் இருப்பதாலும், (அதை) நீங்கள் கற்பவர்களாக இருப்பதாலும் மக்களை சீர்திருத்தம் செய்கின்ற இறையச்சமுள்ள பொறுப்பாளர்களாக (நல்ல வழிகாட்டிகளாக) ஆகிவிடுங்கள்!’’
இன்னும், “மலக்குகளையும், நபிமார்களையும் வணங்கப்படும் தெய்வங்களாக (நீங்கள்) எடுத்துக் கொள்ளுங்கள்” என்று (அவர்) உங்களை ஏவுவதற்கும் அவருக்கு உரிமை இல்லை. நீங்கள் முஸ்லிம்களாக ஆகிய பின்னர் நிராகரிப்பை அவர் உங்களுக்கு ஏவுவாரா?
அல்லாஹ் நபிமார்களின் வாக்குறுதியை வாங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! (அவர்களை நோக்கி) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்கு எப்போது கொடுத்தாலும், (அதற்கு) பிறகு, உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு (இறுதி) தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள வேண்டும்; இன்னும், நிச்சயமாக அவருக்கு நீங்கள் உதவவேண்டும். (இதனை) நீங்கள் ஏற்கிறீர்களா? இதன் மீது என் உறுதியான உடன்படிக்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?’’ என்று அல்லாஹ் (அந்த தூதர்களிடம்) கூறினான். அவர்கள், “நாங்கள் (அதை) ஏற்கிறோம்” எனக் கூறினார்கள். “ஆகவே, (இதற்கு) நீங்களும் சாட்சி பகருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் இருக்கிறேன்’’ என்று அல்லாஹ் கூறினான்.
அல்லாஹ்வின் (இஸ்லாம்) மார்க்கம் அல்லாத (வேறு மார்க்கத்)தையா அவர்கள் விரும்புகிறார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களோ விரும்பியும், நிர்ப்பந்தமாகவும் அவனுக்கே பணிந்தார்கள். இன்னும், (மறுமையில்) அவன் பக்கமே அவர்கள் (அனைவரும்) திரும்ப கொண்டுவரப்படுவார்கள்.
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வையும், எங்கள் மீது இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (இன்னும் அவர்களுடைய) சந்ததிகள் மீது இறக்கப்பட்டதையும்; மூஸா, ஈஸா இன்னும் (அனைத்து) நபிமார்களுக்கு தங்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பிக்கை கொண்டோம். இவர்களில் ஒருவருக்கு மத்தியிலும் (அவரை நபியல்ல என்று) பிரிக்கமாட்டோம். நாங்கள் அவனுக்கே முற்றிலும் பணிந்தவர்கள் (முஸ்லிம்கள்) ஆவோம்.
அல்லாஹ் சில மக்களை எவ்வாறு நேர்வழி செலுத்துவான்! அவர்களோ நம்பிக்கை கொண்டு, “நிச்சயமாக இந்த தூதர் உண்மையானவர்” என்று சாட்சி கூறினார்கள். இன்னும், அவர்களிடம் தெளிவான சான்றுகள் வந்தன. ஆனால், அவர்கள் அதற்குப் பின்னர் (மனமுரண்டாக) நிராகரித்தார்கள். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
அதில் (அவர்கள்) நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை விட்டு தண்டனை இலேசாக்கப்படாது. இன்னும், (தங்கள் குற்றத்திற்கு காரணம் கூறி தப்பிக்க) அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.
எனினும், அதற்குப் பின்னர் (வருத்தப்பட்டு, பாவங்களில் இருந்து திருந்தி,) திரும்பி, மன்னிப்புக் கோரி (தங்களை) சீர்திருத்திக் கொண்டவர்களைத் தவிர. (அல்லாஹ் அவர்களை மன்னிப்பான்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
நிச்சயமாக எவர்கள் - அவர்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்தார்களோ; பிறகு, நிராகரிப்பையே அதிகப்படுத்தினார்களோ - அவர்களுடைய மன்னிப்புக்கோருதல் அறவே அங்கீகரிக்கப்படாது. இன்னும், அவர்கள்தான் வழி கெட்டவர்கள்.
நிச்சயமாக எவர்கள் நிராகரித்து, இன்னும் அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே இருந்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களில் ஒருவரிடமிருந்தும் (அவரது குற்றம் மன்னிக்கப்படுவதற்காக) பூமி நிறைய தங்கத்தை அவர் மீட்புத் தொகையாக கொடுத்தாலும் அறவே (அது) அங்கீகரிக்கப்படாது. அவர்கள், - துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு. இன்னும், உதவியாளர்களில் ஒருவரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்.
நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தர்மம் செய்யும் வரை நன்மையை அறவே அடையமாட்டீர்கள். இன்னும், பொருளில் எதை (நீங்கள்) தர்மம் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவன் ஆவான்.
தவ்ராத் இறக்கப்படுவதற்கு முன்னர் இஸ்ரவேலர்களுக்கு எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது, இஸ்ராயீல் தன் மீது விலக்கியவற்றைத் தவிர. “(யூதர்களே! நீங்கள்) உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவாருங்கள்! இன்னும் அதை ஓதுங்கள்!” என்று (நபியே!) கூறுவீராக.
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் உண்மை கூறிவிட்டான். ஆகவே, இஸ்லாமிய மார்க்கத்தில் (ஏகத்துவ கொள்கையில்) உறுதியுடையவரான இப்ராஹீமின் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றுங்கள். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.’’
நிச்சயமாக மக்களுக்கு அமைக்கப்பட்ட முதல் இல்லம், (மக்கா என்றழைக்கப்படும்) ‘பக்கா’வில் உள்ளதாகும். அது பாக்கியமிக்கதும் (அதிகமான நன்மைகளை உடையதும்) அகிலத்தார்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் இருக்கிறது.
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (அவற்றில் ஒன்று,) இப்ராஹீம் நின்ற இடம். இன்னும், எவர் அ(ந்த இறை ஆலயத்)தில் நுழைகிறாரோ அவர் அச்சமற்றவராக ஆகிவிடுவார். அல்லாஹ்வுக்காக (அந்த) இல்லத்தை ஹஜ் செய்வது அங்கே சென்றுவர சக்தி பெற்ற மக்கள் மீது கடமையாகும். எவர் நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் ஆவான்.
(நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்? நீங்கள் செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் அல்லாஹ் சாட்சியாளன் ஆவான். (அவற்றை அவன் கண்காணிக்கிறான். ஆகவே, அதற்கேற்ப உங்களுக்கு கூலி கொடுப்பான்.)’’
நம்பிக்கையாளர்களே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு (நீங்கள்) கீழ்ப்படிந்தால், நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் உங்களை நிராகரிப்பவர்களாக அவர்கள் மாற்றி விடுவார்கள்.
இன்னும், அனைவரும் அல்லாஹ்வின் (வேதம் எனும்) கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள்; இன்னும், பிரிந்து விடாதீர்கள்; இன்னும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள். நீங்கள் எதிரிகளாக இருந்தபோது உங்கள் உள்ளங்களுக்கிடையில் (இஸ்லாமின் மூலம்) அல்லாஹ் இணக்கத்தை ஏற்படுத்தினான். ஆகவே, அவனுடைய அருட்கொடையால் நீங்கள் சகோதரர்களாக ஆகிவிட்டீர்கள். (அதற்கு முன்னர்) நரகக் குழியின் ஓரத்தில் இருந்தீர்கள். ஆக, அதிலிருந்து உங்களை அவன் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
இன்னும், (நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் (தங்களுக்குள் பல மாறுபட்ட கொள்கை உடைய பிரிவுகளாக) பிரிந்து, கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்களைப் போல் நீங்கள் ஆகிவிடாதீர்கள். இன்னும், அவர்களுக்கு பெரிய தண்டனை உண்டு.
(சில) முகங்கள் வெண்மையாகின்ற, (சில) முகங்கள் கருக்கின்ற நாளில் (அந்த தண்டனையை அவர்கள் அடைவார்கள்). ஆக, முகங்கள் கருத்தவர்கள், - (அவர்களை நோக்கி கூறப்படும்:) “நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்தீர்களா? ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் தண்டனையை சுவையுங்கள்.’’
(நம்பிக்கையாளர்களே!) மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மையை (மக்களுக்கு) ஏவுகிறீர்கள்; இன்னும், தீமையை விட்டும் (மக்களை) தடுக்கிறீர்கள்; இன்னும், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதக்காரர்களும் (உங்களைப் போன்று) நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் உண்டு. அவர்களில் அதிகமானவர்களோ பாவிகள்தான்.
(நம்பிக்கையாளர்களே! ஒரு சொற்ப) சிரமத்தைத் தவிர உங்களுக்கு அவர்கள் அறவே தீங்கு செய்யமுடியாது. இன்னும், உங்களிடம் அவர்கள் போரிட்டால் உங்களைவிட்டும் அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். பிறகு, (அல்லாஹ்வின் புறத்திலிருந்து) அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.
அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. எனினும், அல்லாஹ்வின் ஒப்பந்தம்; இன்னும், மக்களின் ஒப்பந்தத்தின் மூலமே தவிர அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. இன்னும், அவர்கள் அல்லாஹ்வின் கோபத்தை சுமந்துகொண்டார்கள். ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டது. அதற்கு காரணம், “நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பவர்களாக இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்பவர்களாக இருந்ததும் ஆகும். இன்னும், அதற்கு காரணம் அவர்கள் மாறுசெய்ததும், (இறைக் கட்டளையை) மீறுபவர்களாக இருந்ததும் ஆகும்.
(வேதம் கொடுக்கப்பட்ட) அவர்கள் (எல்லோரும்) சமமானவர்களாக இல்லை. வேதக்காரர்களில் நீதமான ஒரு கூட்டத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் (இஸ்லாமை மார்க்கமாக ஏற்று) இரவு நேரங்களில் சிரம்பணிந்து தொழுதவர்களாக* அல்லாஹ்வின் வசனங்களை (தொழுகையில்) ஓதுகிறார்கள்.
*காயிமா: நின்று தொழுபவர்கள், நீதமானவர்கள், மார்க்கத்தை உறுதியாக பின்பற்றுபவர்கள்.
நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களின் செல்வங்களும், அவர்களின் சந்ததிகளும் அல்லாஹ்விடமிருந்து (தண்டனையில்) எதையும் அவர்களை விட்டும் தடுக்காது. இன்னும், அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக அவர்கள்) தர்மம் செய்வதின் உதாரணம், அதில் கடுமையான குளிருள்ள ஒரு காற்றின் உதாரணத்தைப் போலாகும். தங்களுக்குத் தாமே அநீதியிழைத்த கூட்டத்தாரின் விளை நிலத்தை (அக்காற்று) அடைந்து, அதை அழித்தது. அல்லாஹ் அவர்களுக்கு அநீதியிழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதியிழைக்கிறார்கள்.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாத மற்றவர்களில் உற்ற நண்பர்களை (உங்களுக்கு) ஏற்படுத்தாதீர்கள். அவர்கள் உங்களுக்கு தீங்கிழைப்பதில் குறைவு செய்யமாட்டார்கள்; நீங்கள் துன்பப்படுவதை (-சிரமப்படுவதை) அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்களிலிருந்து பகைமை வெளிப்பட்டுவிட்டது. இன்னும், (பகைமையில்) அவர்களுடைய நெஞ்சங்கள் மறைப்பதோ (தீமையால் அதைவிட) மிகப் பெரியது. திட்டமாக அத்தாட்சிகளை உங்களுக்கு விவரித்தோம், நீங்கள் புரிபவர்களாக இருந்தால்.
நீங்கள் இவர்கள் மீது அன்பு காட்டுகிறீர்கள்! ஆனால், அவர்கள் உங்கள் மீது அன்பு காட்டுவதில்லை. எல்லா வேதங்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை.) அவர்கள் உங்களைச் சந்தித்தால், “நம்பிக்கை கொண்டோம்” எனக் கூறுகிறார்கள். அவர்கள் (உங்களை விட்டு) தனித்தால் உங்கள் மீது (உள்ள) கோபத்தினால் (தங்கள்) விரல் நுனிகளை கடிக்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “உங்கள் கோபத்தில் நீங்கள் செத்து மடியுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.’’
உங்களை ஒரு நல்லது அடைந்தால் (அது) அவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இன்னும், உங்களை ஒரு தீங்கு அடைந்தால் அதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். நீங்கள் பொறுமையாக இருந்தால், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு சிறிதளவும் தீங்கிழைக்காது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்து (அறிந்து)ள்ளான்.
இன்னும், (நபியே!) போருக்காக (அதற்கு பொருத்தமான) இடங்களில் நம்பிக்கையாளர்களை நீர் தங்க வைப்பதற்காக உம் குடும்பத்திலிருந்து காலையில் புறப்பட்ட சமயத்தை நினைவு கூர்வீராக! அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
உங்களில் இரு பிரிவினர் கோழைகளாகி (போரை விட்டு) விலகிவிட நாடிய சமயத்தை நினைவு கூர்வீராக! அல்லாஹ்வோ அவ்விருவரின் பொறுப்பாளன் ஆவான். இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே (தவக்குல்) நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)ப்பார்களாக!
பத்(ர் போ)ரில் நீங்கள் குறைவானவர்களாக இருந்த நிலையில், திட்டவட்டமாக அல்லாஹ் உங்களுக்கு உதவினான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
“(வானத்திலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவது உங்களுக்குப் போதுமாகாதா?’’ என நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
ஆம், போதுமாகிவிடும். நீங்கள் பொறுமையாக இருந்தால்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால்; இன்னும், அவர்கள் இதே வேகத்தில் (-இதே நேரத்தில்) உங்களிடம் (போருக்கு) வந்தால், (தங்களைத் தாமே) அடையாளமிட்டுக்கொண்ட ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.
இன்னும், உங்களுக்கு நற்செய்தியாகவும், அதன் மூலம் உங்கள் உள்ளங்கள் நிம்மதி அடைவதற்காகவும் தவிர அல்லாஹ் அதை (-வானவர்களை இறக்கிவைப்பதை) ஏற்படுத்தவில்லை. இன்னும் உதவி வராது, மிகைத்தவனும் ஞானவானுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர.
நிராகரிப்பாளர்களில் ஒரு பகுதியை அல்லாஹ் அழிப்பதற்காக; அல்லது, அல்லாஹ் அவர்களை கேவலப்படுத்திவிட, அவர்கள் (தங்கள்) ஆசை நிறைவேறாதவர்களாக திரும்புவதற்காக (அல்லாஹ் உங்களுக்கு உதவினான்).
அல்லது, அவர்க(ளில் மீதமுள்ளவர்க)ளை அல்லாஹ் மன்னிப்பதற்காக; அல்லது, நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள் என்பதால் அவர்களை அல்லாஹ் தண்டிப்பதற்காக (அல்லாஹ் உங்களுக்கு உதவினான்). (ஆகவே, இவை) எதிலும் (நபியே) உமக்கு அதிகாரம் ஏதும் இல்லை. (இவை அனைத்தும் அல்லாஹ்விற்கும் அவனது அடியார்களுக்கும் இடையில் உள்ளவை ஆகும். அவன் தான் நாடியவர்களுடன் நாடியபடி நடப்பான்.)
இன்னும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியவை! அவன், தான் நாடியவர்களை மன்னிப்பான்; இன்னும், தான் நாடியவர்களை தண்டிப்பான். இன்னும், அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
இன்னும், உங்கள் இறைவனின் மன்னிப்பின் பக்கமும் சொர்க்கத்தின் பக்கமும் விரையுங்கள். அதன் அகலம் வானங்களும் பூமியுமாகும். (அது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள், செல்வத்திலும் வறுமையிலும் தர்மம் செய்வார்கள்; இன்னும், கோபத்தை மென்றுவிடுவார்கள்; இன்னும், மக்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால்; அல்லது, தங்களுக்குத் தாமே அநீதியிழைத்துவிட்டால் (உடனே) அல்லாஹ்வை நினைவில் கொண்டுவருவார்கள்; தங்கள் பாவங்களுக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை யார் மன்னிப்பார்? அவர்களுமோ (பாவம் என) அறிந்தவர்களாக இருந்த நிலையில் தாங்கள் செய்த (பாவத்)தின் மீது பிடிவாதமாக தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டார்கள்.
அத்தகையவர்கள் - அவர்களின் கூலி அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சொர்க்கங்களும் ஆகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நல்ல அமல் செய்பவர்களின் கூலி மிக சிறந்ததாக இருக்கும்!
உங்களுக்கு முன்னர் (பாவிகளுடன் அல்லாஹ் நடந்து கொண்ட) பல நடைமுறைகள் (இன்னும் அவர்கள் மீது அல்லாஹ் இறக்கிய பல தண்டனைகள்) சென்றுவிட்டன. ஆகவே, பூமியில் சுற்றுங்கள். இன்னும், பொய்ப்பித்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று பாருங்கள்!
(குர்ஆனாகிய) இது (உலக) மக்கள் அனைவருக்கும் ஒரு தெளிவுரையும் நேர்வழிகாட்டியுமாகும். இன்னும், (குறிப்பாக) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு (இது) (பலனளிக்கும்) நல்லுபதேசம் ஆகும்.
உங்களுக்கு காயம் (-உயிர்ச் சேதம், உடல் சேதம்) ஏற்பட்டால் (நிராகரிப்பவர்களாக இருக்கின்ற அந்த) மக்களுக்கும் அது போன்ற காயம் (-உயிர்ச் சேதம், உடல் சேதம்) ஏற்பட்டுள்ளது. (சோதனைகள் நிறைந்த) அந்த நாள்கள் - அவற்றை மக்களுக்கு மத்தியில் (சில சமயம் அவர்களுக்கும் சில சமயம் உங்களுக்கும்) நாம் சுழற்றுகிறோம். (உண்மையான) நம்பிக்கையாளர்களை அல்லாஹ் (நீங்கள் அறியும்படி வெளிப்படையாக) அறிவதற்காகவும், உங்களில் சிலரை போரில் கொல்லப்படும் தியாகிகளாக அவன் எடுப்பதற்காகவும் (காலங்களை ஒரு சமயம் உங்களுக்கு சாதகமாகவும் ஒரு சமயம் உங்களுக்கு பாதகமாகவும் அல்லாஹ் சுழற்றுகிறான்). (அல்லாஹ்வின் மார்க்கத்தை எதிர்க்கின்ற) அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ் அன்பு வைக்க மாட்டான்.
இன்னும், திட்டவட்டமாக, (போரில்) மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னர் அதை ஆசைப்படுபவர்களாக இருந்தீர்கள். ஆக, (இப்போது) அதை நீங்கள் கண்கூடாக பார்த்தும் விட்டீர்கள்.
முஹம்மத் ஒரு தூதரே தவிர (இறைவன்) இல்லை. அவருக்கு முன்னர் (பல) தூதர்கள் (வந்து) சென்றுவிட்டார்கள். அவர் இறந்தால்; அல்லது, கொல்லப்பட்டால் நீங்கள் (மார்க்கத்தை விட்டும்) உங்கள் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவீர்களோ? எவர் தன் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவாரோ (அவர்) அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்குசெய்யமுடியாது. நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் (நற்)கூலி வழங்குவான்.
இன்னும், எந்த ஓர் ஆன்மாவும் மரணிப்பது சாத்தியம் இல்லை, அல்லாஹ்வின் அனுமதியுடன் காலம் குறிக்கப்பட்ட விதியின் படியே தவிர. இன்னும், எவர் உலகத்தின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம். இன்னும், எவர் மறுமையின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம். இன்னும், நன்றி செலுத்துபவர்களுக்கு (நற்)கூலி வழங்குவோம்.
எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் (சேர்ந்து எதிரிகளிடம்) அதிகமான இறை நேச நல்லடியார்கள் போர் புரிந்தனர். ஆக, அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட (சிரமத்)தின் காரணமாக (எதிரிகள் முன்) அவர்கள் துணிவு இழக்கவில்லை; இன்னும், பலவீனமடையவில்லை; இன்னும், பணியவில்லை. அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்கள் மீது அன்பு வைக்கிறான்.
இன்னும், “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியத்தில் நாங்கள் வரம்புமீறியதையும் எங்களுக்கு மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இன்னும், நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!’’ என்று கூறியதைத் தவிர அவர்களுடைய கூற்றாக (வேறொன்றும்) இருக்கவில்லை.
நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் உங்கள் குதிங்கால்கள் மீது உங்களை அவர்கள் (இறை நம்பிக்கையிலிருந்து நிராகரிப்பின் பக்கம்) திருப்பி விடுவார்கள். ஆக, (அப்போது நீங்கள் வழிகெட்டு, இம்மையையும் மறுமையையும் இழந்து) நஷ்டவாளிகளாக திரும்பி விடுவீர்கள்.
மாறாக, அல்லாஹ்தான் உங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன், அரசன்) ஆவான். இன்னும், உதவியாளர்களில் அவனே (உங்களுக்கு மிகச்) சிறந்தவன் ஆவான்.
அல்லாஹ் எதற்கு ஓர் ஆதாரத்தை இறக்கவில்லையோ அதை அல்லாஹ்விற்கு இணையாக்கி வணங்கிய காரணத்தால் அந்த நிராகரிப்பாளர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை போடுவோம். இன்னும், அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.
(நம்பிக்கையாளர்களே! உஹுத் போரில்) நீங்கள் அவனுடைய அனுமதியுடன் (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை வெட்டி வீழ்த்தியபோது அல்லாஹ் தன் வாக்கை உங்களுக்கு திட்டவட்டமாக உண்மையாக்கினான். இறுதியாக, நீங்கள் கோழையாகி, (தூதருடைய) கட்டளையில் தர்க்கித்து, நீங்கள் விரும்புவதை அவன் உங்களுக்குக் காண்பித்ததற்கு பின்னர் (தூதருக்கு) மாறுசெய்தபோது (அல்லாஹ் தன் உதவியை நிறுத்தினான்). (மலைக் குன்றின் மீது நிறுத்தப்பட்டிருந்த) உங்களில் உலக (செல்வ)த்தை நாடி (நபியின் கட்டளையை மீறி மலையிலிருந்து கீழே இறங்கி)யவரும் உண்டு. இன்னும், உங்களில் மறுமை(யின் நன்மை)யை நாடிய (நபியின் கட்டளைப்படி அங்கேயே இருந்து வீர மரணம் அடைந்த)வரும் உண்டு. பிறகு உங்களைச் சோதிப்பதற்காக (தோற்கடிக்கப்பட இருந்த) அவர்களை விட்டும் உங்களை திருப்பினான். (இன்னும் உங்கள் தவறுக்குப் பின்னர்) திட்டவட்டமாக அவன் உங்களை மன்னித்துவிட்டான். அல்லாஹ், நம்பிக்கையாளர்கள் மீது (எப்போதும் விசேஷமான) அருளுடையவன் ஆவான்.
(உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு (படையின் இறுதி(ப் பகுதி)யில் இருந்தவாறு உங்களை அழைக்க, நீங்கள் ஒருவரையும் எதிர்பார்க்காமல் வேகமாக ஓடிய சமயத்தை நினைவு கூருங்கள். (தூதருக்கு நீங்கள் கொடுத்த) துயரத்தின் காரணமாக உங்களுக்கு(ம் தோல்வியின்) துயரத்தையே (அல்லாஹ்) கூலியாக்கினான், காரணம், உங்களுக்கு தவறிவிட்ட வெற்றிக்காகவும்; இன்னும், உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காகவும் நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகும். இன்னும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.
பிறகு, துயரத்திற்குப் பின்னர் உங்கள் மீது சிறு நித்திரையை மன நிம்மதிக்காக இறக்கினான். உங்களில் ஒரு வகுப்பாரை அது சூழ்ந்தது. (வேறு) ஒரு வகுப்பாரோ, அவர்களுக்கு அவர்களது ஆன்மாக்கள் அதிக கவலையைத் தந்தன. (இணைவைப்பவர்களின்) மடத்தனமான எண்ணத்தைப் போன்று அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாததை எண்ணுகிறார்கள். “நமக்கு அதிகாரத்தில் ஏதும் உண்டா?’’ என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக: “நிச்சயமாக எல்லா அதிகாரமும் அல்லாஹ்விற்குரியதே.’’ உமக்கு வெளிப்படுத்தாதவற்றை அவர்கள் தங்களுக்குள் மறைக்கிறார்கள். “அதிகாரத்தில் ஏதும் நமக்கு இருந்திருந்தால், இங்கு கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” எனக் கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்தாலும் எவர்கள் மீது (போரில்) கொல்லப்படுவது விதிக்கப்பட்டுவிட்டதோ அவர்கள் தாங்கள் கொல்லப்படும் இடங்களை நோக்கி வெளியாகி வந்தே தீருவார்கள்.’’ (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களிலுள்ளவற்றைப் பரிசோதிப்பதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்குவதற்காகவும் (இவ்வாறு செய்தான்). இன்னும், நெஞ்சங்களில் உள்ளதை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.
இரு கூட்டங்கள் (உஹுதில்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் (போரிலிருந்து) விலகினார்களோ, (அவர்கள் நிராகரிப்பினால் விலகவில்லை. மாறாக) அவர்களை ஷைத்தான் சறுகச் செய்ததெல்லாம் அவர்கள் செய்த சில (தவறான) செயல்களின் காரணமாகத்தான். திட்டவட்டமாக அல்லாஹ் அவர்களை முழுமையாக மன்னித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா சகிப்பாளன் ஆவான்.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பாளர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்களுடைய (முஃமினான) சகோதரர்கள் பூமியில் பயணித்தால் அல்லது போர்புரிபவர்களாக இருந்தால் அவர்களுக்கு (அந்நிராகரிப்பாளர்கள்) கூறினார்கள்: “அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் மரணித்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.’’ அவர்களுடைய உள்ளங்களில் இதை (-இந்த நம்பிக்கையை) ஒரு கைசேதமாக ஆக்குவதற்காகவே (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). அல்லாஹ்தான் வாழவைக்கிறான். இன்னும், மரணிக்க வைக்கிறான். இன்னும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.
நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டாலும் அல்லது நீங்கள் இறந்தாலும் திட்டமாக அல்லாஹ்விடமிருந்து (உங்களுக்கு கிடைக்கும்) மன்னிப்பும் கருணையும் (இவ்வுலகில்) அ(ந்த இணைவைப்ப)வர்கள் சேகரித்து (சேமித்து) வைக்கின்ற (உலக செல்வத்)தை விட மிகச் சிறந்ததாகும்.
ஆக, (நபியே!) நீர் அல்லாஹ்வின் கருணையினால் அவர்களுக்கு மென்மையானவராக ஆகிவிட்டீர். இன்னும், நீர் கடுகடுப்பானவராகவோ, உள்ளம் கடுமையானவராகவோ இருந்திருந்தால் உமது சுற்றுப்புறத்திலிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள். ஆகவே, அவர்களை மன்னிப்பீராக! இன்னும், அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) மன்னிப்புத் தேடுவீராக! இன்னும், காரியங்களில் அவர்களுடன் ஆலோசிப்பீராக! ஆக, நீர் (ஒரு முடிவை) உறுதிசெய்தால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) நம்பிக்கை வை(த்து தன்னை சார்ந்து இரு)ப்பவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைப்பவர் அறவே இல்லை. இன்னும், அவன் உங்களை கைவிட்டால் அதற்குப் பின்னர் உங்களுக்கு உதவுபவர் யார் (இருக்கிறார்)? ஆகவே, நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பார்களாக!
மோசடி செய்வது ஒரு நபிக்கு அழகல்ல. எவர் மோசடி செய்வாரோ அவர், தான் செய்த மோசடியுடன் மறுமை நாளில் வருவார். பிறகு, ஒவ்வோர் ஆன்மாவு(க்கு)ம் அது செய்ததை முழுமையாக (கணக்கிட்டு கூலி) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
ஆக, யார் (நேர்மையாக நடப்பதில்) அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினாரோ அவர், யார் (மோசடி செய்து) அல்லாஹ்வின் கோபத்தை சுமந்தாரோ, இன்னும் அவருடைய தங்குமிடம் நரகமாக ஆகிவிட்டதோ அவரைப் போன்று ஆகுவாரா? அ(ந்த நரகமான)து மிக கெட்ட மீளுமிடமாகும்.
நம்பிக்கையாளர்கள் மீது திட்டமாக அல்லாஹ் அருள் புரிந்தான் - அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு மத்தியில் அனுப்பியபோது. அவர் அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும், அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார்; இன்னும், அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். நிச்சயமாக (அவர்கள் இதற்கு) முன்னர் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர்.
(நிராகரிப்பாளர்கள் மூலம் உஹுத் போரில்) உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டபோது (‘பத்ர்’ போரில் அவர்களுக்கு) அது போன்று இருமடங்கை நீங்கள் கொடுத்திருக்க, “இ(ந்த சோதனையான)து எங்கிருந்து வந்தது” என்று கூறுகிறீர்களா? (நபியே!) கூறுவீராக: “உங்களிடமிருந்துதான் அது ஏற்பட்டது. (அதற்கு காரணம் நீங்கள்தான்.)” நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
இன்னும், இரு கூட்டங்களும் (உஹுத் போரில்) சந்தித்த நாளில் உங்களுக்கு எது ஏற்பட்டதோ அது அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் ஏற்பட்டது. (அல்லாஹ்) நம்பிக்கையாளர்களை (நயவஞ்சகக்காரர்களிடமிருந்து பிரித்து வெளிப்படையாக) அறிவதற்காகவும் (இந்த சோதனை உங்களுக்கு ஏற்பட்டது).
இன்னும், நயவஞ்சகர்களை (நம்பிக்கையாளர்களில் இருந்து பிரித்து வெளிப்படையாக) அறிவதற்காகவும் (இந்த சோதனை உங்களுக்கு ஏற்பட்டது). இன்னும், “வாருங்கள், அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். அல்லது, (அந்த நிராகரிப்பவர்களைத்) தடுங்கள்” என்று அ(ந்த நயவஞ்சகம் உடைய)வர்களுக்கு கூறப்பட்டது. (அதற்கு) “போர் என்று (இதை) நாங்கள் அறிந்திருந்தால் நிச்சயமாக உங்களைப் பின்பற்றி (போருக்கு வந்து) இருப்போம்” என்று கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையை விட நிராகரிப்புக்கே மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாததை தங்கள் வாய்களால் கூறுகிறார்கள். இன்னும், அவர்கள் மறைப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன் ஆவான்.
அ(ந்த நயவஞ்சகமுடைய)வர்கள் (தங்கள் வீடுகளில்) உட்கார்ந்து கொண்டு, (போரில் கொல்லப்பட்ட) தங்கள் (முஃமினான) சகோதரர்கள் பற்றி, “இவர்கள் எங்களுக்கு கீழ்ப்படிந்திருந்தால் (போரில்) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “ஆக, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டும் மரணத்தை (அது உங்களுக்கு வரும்போது) நீங்கள் தடு(த்துப்பாரு)ங்கள்!’’
(நபியே!) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக எண்ணாதீர். மாறாக, (அவர்கள்) உயிருள்ளவர்கள், தங்கள் இறைவனிடம் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்கு கொடுத்ததினாலும் அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக இருப்பார்கள். இன்னும், தங்களுடன் வந்து சேராமல், தங்களுக்குப் பின்னால் (இவ்வுலகில் உயிரோடு தங்கி) இருப்பவர்களினாலும் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், அதாவது, (அவர்களும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டால்) “அவர்கள் மீது ஒரு பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’’ என்று.
அவர்கள் (-அந்த உண்மையான நம்பிக்கையாளர்கள்) தங்களுக்கு காயமேற்பட்ட பின்னரும் அல்லாஹ்விற்கும் தூதருக்கும் பதிலளித்தார்கள். (அவர்கள் காயங்களுடன் இருந்தபோதும் தூதரின் அழைப்பை ஏற்று போருக்கு சென்றார்கள்.) நல்லறம் புரிந்து, அல்லாஹ்வை அஞ்சிய (அ)வர்களுக்கு மகத்தான கூலி உண்டு.
(-அந்த உண்மையான நம்பிக்கையாளர்கள்,) மக்கள் அவர்களுக்கு கூறினர்: “நிச்சயமாக மக்கள் (தங்கள் படைகளையும் ஆயுதங்களையும்) உங்களுக்காக (-உங்களை எதிர்ப்பதற்காக) திட்டமாக ஒன்று சேர்த்துள்ளனர், ஆகவே, அவர்களைப் பயப்படுங்கள்! (அவர்களுடன் போருக்கு சென்று விடாதீர்கள்!)’’ ஆனால், இந்த அச்சுறுத்தலோ அவர்களுக்கு நம்பிக்கையை(த்தான் மேலும்) அதிகப்படுத்தியது. இன்னும், “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன், அவன் சிறந்த பொறுப்பாளன்’’ என்று அவர்கள் (நம்பிக்கையுடன்) கூறினார்கள்.
ஆக, அல்லாஹ்வின் கிருபை இன்னும் அருளுடன் அவர்கள் திரும்பினார்கள். அவர்களை ஒரு தீங்கும் அணுகவில்லை. இன்னும் அல்லாஹ்வின் விருப்பத்தை அவர்கள் பின்பற்றினார்கள். அல்லாஹ் (நம்பிக்கையாளர்கள் மீது) மகத்தான அருளுடையவன் ஆவான்.
இன்னும், (நபியே!) நிராகரிப்பில் விரைபவர்கள் உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்கிழைக்க மாட்டார்கள். மறுமையில் அறவே நற்பாக்கியத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாமல் இருக்கவே அல்லாஹ் நாடுகிறான். இன்னும், அவர்களுக்கு மகத்தான தண்டனை உண்டு.
நிச்சயமாக, நம்பிக்கைக்குப் பகரமாக நிராகரிப்பை வாங்கியவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்கிழைக்க மாட்டார்கள். இன்னும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
நிராகரிப்பவர்கள் - “நாம் அவர்க(ளை உடனே தண்டிக்காமல் அவர்க)ளுக்கு அவகாசம் அளிப்பது அவர்களுக்கு நல்லதென்று” - நிச்சயம் எண்ண வேண்டாம். நாம் அவர்களுக்கு அவகாசமளிப்பதெல்லாம், அவர்கள் பாவத்தால் அதிகரிப்பதற்காகவே. இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையும் அவர்களுக்குண்டு.
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இருக்கின்ற இதே நிலையில் நம்பிக்கையாளர்(களாகிய உங்)களை அல்லாஹ் விட்டுவிடுபவனாக இல்லை. (சோதனையின்) இறுதியாக நல்லவர்களிலிருந்து, தீயவர்களை பிரிப்பான். இன்னும், மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவிப்பவனாகவும் இல்லை. எனினும் தன் தூதர்களில் தான் நாடியவர்களை அல்லாஹ் தேர்ந்தெடு(த்து அவருக்கு அறிவி)ப்பான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், நீங்கள் நம்பிக்கை கொண்டால், அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி (அல்லாஹ்விடம்) உண்டு.
இன்னும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு கொடுத்ததில் கஞ்சத்தனம் செய்பவர்கள், “அது தங்களுக்கு நல்லது” என்று எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீமையாகும். அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ (அது மறுமையில் விஷப் பாம்பாக மாற்றப்பட்டு அவர்களின் கழுத்துகளில்) அதை சுற்றப்படுவார்கள். இன்னும், வானங்கள் இன்னும் பூமியின் உரிமை அல்லாஹ்விற்கே உரியதாகும். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
“நிச்சயமாக அல்லாஹ் ஏழையாவான். இன்னும், நாங்கள் செல்வந்தர்கள்’’ என்று கூறியவர்களுடைய கூற்றை திட்டவட்டமாக அல்லாஹ் செவியுற்றான். அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவுசெய்வோம். இன்னும், “எரித்து பொசுக்கும் தண்டனையை சுவையுங்கள்’’ என்று கூறுவோம்.
“நெருப்பு அதை சாப்பிடும்படியான ஒரு (குர்பானி) பலியை எங்களிடம் தூதர் எவரும் கொண்டுவருகின்ற வரை நாங்கள் அவரை நம்பிக்கை கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் எங்களிடம் நிச்சயமாக உடன்படிக்கை செய்திருக்கிறான்’’ என்று அவர்கள் கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “எனக்கு முன்னர் உங்களிடம் பல தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளையும் நீங்கள் கூறியதையும் திட்டமாக கொண்டு வந்தார்கள். ஆகவே, நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை (ஏன் நிராகரித்தீர்கள். இன்னும்,) ஏன் கொலை செய்தீர்கள்?’’
ஆக, (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்ப்பித்தால், உமக்கு முன்னர் தெளிவான அத்தாட்சிகளையும் வேத நூல்களையும் ஒளிவீசுகிற வேதத்தையும் கொண்டு வந்த பல தூதர்களும் திட்டமாக பொய்ப்பிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே. இன்னும், உங்கள் கூலிகளை நீங்கள் முழுமையாக கொடுக்கப்படுவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆக, எவர் (நரக) நெருப்பிலிருந்து தூரமாக்கப்பட்டு சொர்க்கத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவாரோ, (அவர்) திட்டமாக வெற்றி பெற்றார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர (வேறு) இல்லை.
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் செல்வங்களிலும், உங்கள் ஆன்மாக்களிலும் நிச்சயம் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மூலமும், இணைவைத்து வணங்குபவர்களின் மூலமும் அதிகமான வசை மொழியை (-உங்களை சங்கடப்படுத்தும் பேச்சுகளை) நிச்சயம் நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையாக இருந்தால், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி (பாவங்களை விட்டு விலகி) வாழ்ந்தால் நிச்சயமாக அதுதான் உறுதிமிக்க (வீரமிகுந்த, வெற்றிக்குரிய) காரியங்களில் உள்ளதாகும்.
அந்த சமயத்தை நினைவு கூருங்கள்: “வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் உறுதிமொழியை அல்லாஹ் வாங்கினான். அதாவது, அ(ந்த வேதத்)தை மக்களுக்கு நிச்சயம் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்; இன்னும், அதை நீங்கள் மறைக்க மாட்டீர்கள்’’ என்று. ஆனால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தனர். இன்னும், அதற்குப் பகரமாகச் சொற்ப கிரயத்தை வாங்கினர். அவர்கள் வாங்குவது மிக கெட்டதாகும். (பதவிக்காகவும் செல்வத்திற்காகவும் வேதத்தில் உள்ள சட்டத்தை மாற்றவும் மறைக்கவும் செய்தனர்.)
(நபியே! செயல்களில்) எவர்கள் அவர்கள் செய்த(தீய)தின் மூலம் மகிழ்ச்சி அடைகிறார்களோ; இன்னும், அவர்கள் செய்யாத (நல்ல)வற்றைக் கொண்டு அவர்கள் புகழப்படுவதை விரும்புகிறார்களோ அத்தகையவர்கள் தண்டனையிலிருந்து பாதுகாப்பில் இருப்பதாக நிச்சயம் நீர் எண்ணாதீர்! துன்புறுத்தும் தண்டனை (கண்டிப்பாக) அவர்களுக்கு உண்டு.
அவர்கள் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், தங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை (துதித்துப் புகழ்ந்து தொழுது) நினைவு கூர்வார்கள். இன்னும், வானங்கள், பூமி படைக்கப்பட்டிருப்பதில் அவர்கள் சிந்திப்பார்கள். (இன்னும், அவர்கள் பிரார்த்திப்பார்கள்:) “எங்கள் இறைவா! நீ இதை வீணாக படைக்கவில்லை. உன்னைத் தூய்மைப்படுத்துகிறோம். ஆகவே, (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்று!”
“எங்கள் இறைவா! ஓர் அழைப்பாளர், உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள் என்று நம்பிக்கையின் பக்கம் (எங்களை) அழைப்பதை நிச்சயமாக நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, (உன்னையும் அவரையும்) நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! ஆகவே, எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் குற்றங்களை எங்களை விட்டு அகற்றிவிடுவாயாக! இன்னும், (நீ எங்களுக்கு மரணத்தை கொடுக்கும்போது) அப்ரார்* என்ற நல்லோருடன் எங்களுக்கு மரணத்தைத் தருவாயாக! (எங்களையும் அவர்களில் சேர்த்து, அவர்களுடன் எங்களை எழுப்புவாயாக!)”
*அப்ரார் - அல்லாஹ்விற்கு நன்மை செய்தவர்கள். அதாவது, அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்து, அவனுக்கு (-அவனுடைய மார்க்கத்திற்கும் அவனுடைய அடியார்களுக்கும்) பணிவிடைகள் செய்து, அல்லாஹ்வை திருப்திப்படுத்தி, அல்லாஹ்வின் திருப்தியை பெற்ற நல்லடியார்கள் அப்ரார் ஆவார்கள்.
“எங்கள் இறைவா! இன்னும், உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தருவாயாக! இன்னும், மறுமை நாளில் எங்களை இழிவுபடுத்தாதே! நிச்சயமாக நீ வாக்குறுதியை மீற மாட்டாய்’’ (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)
ஆகவே, “உங்களில் ஆண் அல்லது பெண்களில் (நற்)செயல் செய்பவரின் (நற்)செயலை நிச்சயம் நான் வீணாக்க மாட்டேன். உங்களில் சிலர், சிலரைச் சேர்ந்தவர்கள்தான். ஹிஜ்ரத் சென்றவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், என் பாதையில் துன்புறுத்தப்பட்டவர்கள், போர் செய்தவர்கள், (அதில்) கொல்லப்பட்டவர்கள், அவர்களுடைய குற்றங்களை அவர்களை விட்டும் நிச்சயம் நான் அகற்றி விடுவேன். அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயம் அவர்களை பிரவேசிக்கச் செய்வேன்.’’ என்று அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பதிலளி(த்து அவர்களின் பிரார்த்தனைகளை அங்கீகரி)த்தான். அல்லாஹ்விடமிருந்து நற்கூலியாக (இவை அவர்களுக்கு வழங்கப்படும்). இன்னும் அல்லாஹ், அவனிடத்தில்தான் அழகிய நற்கூலி உண்டு.
எனினும், எவர்கள் தங்கள் இறைவனை அஞ்சி (பாவங்களை விட்டு விலகி)யவர்கள், அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து விருந்தோம்பலாக அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அல்லாஹ்விடம் உள்ள (வெகுமதியான)து நல்லடியார்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
இன்னும், வேதக்காரர்களில் அல்லாஹ்விற்கு பணிந்தவர்களாக அல்லாஹ்வையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும், அவர்களுக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், அல்லாஹ்வுடைய வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்க மாட்டார்கள். (வேத வசனங்களை மாற்றி காசுக்காக தவறான சட்டங்களை கூற மாட்டார்கள்.) அவர்கள், அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. நிச்சயமாக அல்லாஹ் (அடியார்களின் செயல்களை) கணக்கெடு(த்து தகுந்த கூலி கொடு)ப்பதில் மிக விரைவானவன்.
Contents of the translations can be downloaded and re-published, with the following terms and conditions:
1. No modification, addition, or deletion of the content.
2. Clearly referring to the publisher and the source (QuranEnc.com).
3. Mentioning the version number when re-publishing the translation.
4. Keeping the transcript information inside the document.
5. Notifying the source (QuranEnc.com) of any note on the translation.
6. Updating the translation according to the latest version issued from the source (QuranEnc.com).
7. Inappropriate advertisements must not be included when displaying translations of the meanings of the Noble Quran.
தேடல் முடிவுகள்:
API specs
Endpoints:
Sura translation
GET / https://quranenc.com/api/v1/translation/sura/{translation_key}/{sura_number} description: get the specified translation (by its translation_key) for the speicified sura (by its number)
Parameters: translation_key: (the key of the currently selected translation) sura_number: [1-114] (Sura number in the mosshaf which should be between 1 and 114)
Returns:
json object containing array of objects, each object contains the "sura", "aya", "translation" and "footnotes".
GET / https://quranenc.com/api/v1/translation/aya/{translation_key}/{sura_number}/{aya_number} description: get the specified translation (by its translation_key) for the speicified aya (by its number sura_number and aya_number)
Parameters: translation_key: (the key of the currently selected translation) sura_number: [1-114] (Sura number in the mosshaf which should be between 1 and 114) aya_number: [1-...] (Aya number in the sura)
Returns:
json object containing the "sura", "aya", "translation" and "footnotes".